மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
சென்னை, ஆகஸ்ட்6-
சென்னையில் வீடு கட்டுவதற்கான சுயசான்று அனுமதி கட்டணத்திற்கும், ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுயசான்றிதழ் அடிப்படையில், இணையவழி மூலம் சமர்ப்பித்த உடனேயே கூர்ந்தாய்வு கட்டணம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2,500 சதுரஅடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுர அடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த முறையில் அனுமதி வழங்கும்போது, கட்டிட அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, மக்கள் தனி வீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்கிறது. வணிக நோக்கத்தோடு கட்டுபவர்களுக்காக கொண்டு வரப்படவில்லை.
ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் அனுமதி வழங்கும்போது வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.99.70 ஆகும். அதன்படி பார்க்கும்போது, சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிக்கான கட்டணங்கள் ஏற்கனவே உள்ள கட்டணங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசம் இல்லை என்பது தெளிவு.
மேலும், ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டிடங்களுக்கான சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்படும் அனுமதி கட்டணம் சற்று அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அந்தக் கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. தவறான கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்வதற்காக சிலர் முயற்சி செய்கிறார்கள்.
எனவே, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடுத்தர தரப்பு மக்கள் பயன்படுத்தி தங்களின் கனவான வீடு கட்டுவதற்கு எளிமையான முறையில் அனுமதியை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.