அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச. 10–
மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், சென்னையில் 300 முதல் 400 மரங்கள் வரையில் விழுந்துள்ளதாகவும் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதையடுத்து, மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது சைதாப்பேட்டை தொகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மரங்களை அகற்றும் பணி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், ‘சென்னையில் 300 முதல் 400 மரங்கள் வரையில் விழுந்துள்ளன. மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 200 வாகனங்கள், 130 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வார்டுக்கு ஒரு மோட்டார் இயந்திரம் இருக்கும் நிலையில் 911 மோட்டார் இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
261 மரம் அறுக்கும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரைவில் சாலையில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சாலைகள் சீர்செய்யப்படும். “சென்னையில் 16 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் சீரானப் போக்குவரத்து நடைபெறுகிறது. மேலும் புயலையொட்டி, 169 இடங்களில் நிவாரண மையங்களும் தயார் நிலையில் உள்ளன’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.