செய்திகள்

சென்னையில் விமான சேவை பாதிப்பு; 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை, நவ. 30–

தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையின் நகர்ப் பகுதிகள் புறநகர்ப் பகுதிகள் என்று பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை அதிகமாகவே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், நீர் தேங்கியதால் நகரில் இருக்கும் சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது. கனமழை தொடர்ந்து கொட்டி வந்த நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

விமானங்கள் தாமதம்

நேற்றிரவு குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் மழை அதிகமாகவே இருந்தது. கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தொடர்ச்சியாகக் கனமழை பெய்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அதேபோல சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, மதுரை உள்பட 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *