சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவு
சென்னை, ஆக. 5–
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை, விடிய, விடிய தொடர்ந்து இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் பெய்தது.
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர்.
ஆனால் மாறாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள், பெற்றோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இரவு முதல் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லுாரில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல கேளம்பாக்கம் – 10 செ.மீ., அடையாறு – 10 செ.மீ., எழும்பூர், திருவொற்றியூர் – 9 செ.மீ. கத்திவாக்கம், கிண்டி, செம்பரம்பாக்கம், கொளத்தூர் தலா 8 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், அண்ணா நகர், காஞ்சிபுரம் தலா 7 செ.மீ., தேனாம்பேட்டை, மணலி தலா 6 செ.மீ. மழை பதிவானது.
இது தவிர, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது. நெய்வேலி –11 செ.மீ. அரியலூரில் – 5 செ.மீ., பெரம்பலூர் – 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.