வெப்பம் தணிந்து குளர்ச்சியானது
சென்னை, செப். 24–
சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. உஷ்ணத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டியது. நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அடையாறு, திநகர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், கிண்டி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் வெப்பம் தணிந்து சென்னை நகரம் குளிர்ச்சியாக மாறியது. அதேவேளையில் தென் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
அதிகபட்சமாக மணலியில் 14 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அம்பத்தூர், மதுரவாயல், திருநின்றவூர் – 8 செ.மீ., வளசரவாக்கம், திருவேற்காடு, செங்குன்றம் தலா 6 செ.மீ., சோழவரம் 5 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.