சென்னை, ஆக.1–
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.92 குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டரின் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் ரூ.1,852 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதிக்குப் பின்னர் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.