செய்திகள்

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Makkal Kural Official

சென்னை, செப்.26-

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலம் வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதன்படி, திருவொற்றியூர் (மண்டலம்) – தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஜி.எஸ்.சமீரன், மணலி – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், மாதவரம் – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டை – தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் கண்ணன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ், திரு.வி.க. நகர் – நகரமைப்பு திட்டமிடல் இயக்குனர் பி.கணேசன், அம்பத்தூர் – சென்னை–கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குனர் ராமன், அண்ணாநகர் – தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனாம்பேட்டை – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் பிரதாப், கோடம்பாக்கம் – தமிழ்நாடு மதுபான வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன், வளசவாக்கம் – சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும தலைமை செயல் அதிகாரி சிவஞானம், ஆலந்தூர் – நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் பிரபாகர், அடையார் – சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், பெருங்குடி – கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார், சோழிங்கநல்லூர் – வணிக வரிகள் (சென்னை) கூடுதல் கமிஷனர் உமா மகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டலம் வாரியாக, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தயாராக இருப்பது, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்பது, நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பது, தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *