சென்னை, மே 8–
ரஷ்ய கல்விக் கண்காட்சி சென்னையில் 10,11, ந்தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், கோவையில் 13 ந்தேதியும், சேலத்தில் 14 ந்தேதியும் திருச்சியில் 15 ந்தேதியும் மதுரையில் 16 ந்தேதியும் நடைபெற உள்ளது.
இது குறித்து, தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் வாலெரி கோட்ஜெவ், ரஷ்ய பண்பாட்டு மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் டோடோநவ், ‘ஸ்டடி அப்ராட்’ இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:–
2025-26 ஆம் கல்வியாண்டில் ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள், 10,000- க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இது கடந்த ஆண்டு 8,000 என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மையான தேர்வாக இருக்கிறது.
பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள்
இந்நிலையில், ரஷ்யாவின் புகழ்பெற்ற வோல்கோகிராட் மெடிக்கல் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தமிழ்நாட்டில் பங்கேற்கும் நேரடி கல்விக்கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் மே 10,11 ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அங்கே தகுதி உள்ள மாணவர்கள் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கு நேரடி அட்மிஷன் பெறலாம்.
சென்னையைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஓட்டலிலும், மே 14-ந்தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 15-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும், மே 16-ஆம் தேதி மதுரை ராயல் கோர்ட் ஓட்டலிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
தேசிய தகுதி -நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்று, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். / பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை” என்று தெரிவித்தனர்.
200 பேருக்கு முழு உதவித்தொகை
“கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும். ரஷ்யாவில் உயர் கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் ரஷ்யக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் கல்விக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது.
“ரஷ்யா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,00,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது. தற்போது, 30 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சுமார் 25,000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து மருத்துவ இளநிலை படிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக சர்வதேச தொடர்புப் பிரிவின் தலைவர் நடாலியா அல்சுக் பங்கேற்றார்.