செய்திகள்

சென்னையில் மீண்டும் பரவும் மெட்ராஸ்-ஐ’: தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சென்னை, ஜன. 5–

சென்னையில் மீண்டும் மெட்ராஸ்-ஐ பரவத் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் பரவுகிறது.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண் நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் இந்த நோய் பரவியது. அதன் பிறகு குறைந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.

தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள்.

கண் எரிச்சல், விழிப்பகுதி சிவப்பாக மாறியிருப்பது. எப்போதும் நீர் சுரப்பது. தூக்கத்தில் இமைகள் ஒட்டிக்கொள்வது இதன் அறிகுறியாகும்.

மெட்ராஸ்-ஐ காற்றின் மூலமும், மாசு மூலமும் பரவலாம். அதேபோல் கண்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினாலும் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, மெட்ராஸ்-ஐ வந்தால் 5 நாட்களில் குணமாகி விடும். இதற்கு தேவையான மருந்துகளும் அரசு மருத்துவமனையில் கையிருப்பில் உள்ளது.

இவை எளிதில் மற்றவர்களுக்கு பரவும் தன்மையுடையது என்பதால் கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த நோய் எளிதில் குணமாக கூடியது. அதே வேளையில் அலட்சியப்படுத்தினால் பார்வையிழப்பை கூடச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *