செய்திகள்

சென்னையில் மகிழ்ச்சியுடன், பாதுகாப்பாக புத்தாண்டு கொண்டாடிய மக்கள்

Makkal Kural Official

கோவில்கள், தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை, ஜன. 1–

சென்னையில் மக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் புத்தாண்டை கொண்டாடினார்கள்.

நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்து நள்ளிரவில் உற்சாகமாக ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை காமராஜர் சாலையில், புத்தாண்டை வரவேற்க வண்ண விளக்குகளால் மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் வந்து இருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இரவு 7 மணிக்கு பிறகு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் செல்லாத வகையில் இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டது. இரவு 8 மணிக்கு பிறகு இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் இனிப்புகளையும் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். காவல்துறை சார்பிலும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்கள்.

மகிழ்ச்சியான, பாதுகாப்பான

கொண்டாட்டம்

இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். ஏலோ லைட் எனும் நிறுவனத்துடன் இணைந்து காவல் துறையினர் ட்ரோன் ஷோ நடத்தினர். இதை பார்த்து மக்கள் பிரமிப்பு அடைந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு சென்னை மாநகர மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடினார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

கோவில்களில் சிறப்பு

வழிபாடு

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் வெங்ட்நாராயணன் கோவில், திருவேற்காடு, மாங்காடு, திருவான்மியூர், திருவொற்றியூர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் , திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

தேவாலயங்களில்

சிறப்பு பிரார்த்தனை

அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் முதல் ட்ரோன் ஷோ நடைபெற்றது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *