போஸ்டர் செய்தி

சென்னையில் போலீசாரை அரிவாளால் தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுக்கொலை

Spread the love

சென்னை, ஜூன் 15

சென்னையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வல்லரசு போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வல்லரசு (வயது 24). இவன் மீது ஒரு கொலை வழக்கும் மற்றும் கொலை முயற்சி, கொள்ளை என்று 10க்கும் மேற்பட்ட வழக்குகள் வியாசர்பாடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரவுடி வல்லரசுவை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகள் கதிரவன், கார்த்தி ஆகியோருடன் பட்டா கத்தியுடன் புரசைவாக்கத்தில் பதுங்கியருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு வியாசர்பாடி காவலர்கள் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் விரைந்து சென்று வல்லரசு கதிரவன், கார்த்தி ஆகியோரை பிடிக்க முயன்றது. அப்போது ரவுடி வல்லரசு அரிவாளால் காவலர் ரமேஷை தாக்க முயன்றனர். அவர் விலகியதால் அரிவாள் காவலர் பவுன்ராஜ் தலையில் பட்டது. இதில் அவர் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த காவலர்களை கமிஷனர் விசுவநாதன் நேரில் சந்தித்தார்

இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் உத்தரவிட்டார். வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மில்லர், ரவி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடிய குற்றவாளிகள் கதிரவன், கார்த்தி ஆகியோரை புரசைவாக்கம் டவுட்டன் அருகே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரவுடி வல்லரசு மாதவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கன்டெய்னர் லாரி செட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று சுற்றி வளைத்து ரவுடி வல்லரசுவை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி வல்லரசு அரிவாளால் போலீசாரை கடுமையாக தாக்கினான். இதில் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தீபன்ராஜ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்த வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

படுகாயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தீபன்ராஜ் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர்களை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் இன்று காலை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன்ராஜ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலைமை காவலர் பவுன்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பொன்னேரி 2 வது நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *