செய்திகள்

சென்னையில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த நர்சுகளுடன் அரசு பேச்சுவார்த்தை

சொந்த ஊரில் பணி வழங்குவதாக உறுதி

சென்னை, ஜன.8-–

போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த நர்சுகளுக்கு சொந்த ஊரில் பணி வழங்கப்படும் என்று அரசு தரப்பில நடந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக நர்சுகளை பணியில் இருந்து விடுவித்ததாக கூறி, கடந்த சில நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து தற்காலிக நர்சுகளின் பிரதிநிதிகளுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் ச.உமா, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் எ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் தி.சி.செல்வவிநாயகம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் வி.பி.ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-–

நர்சுகளுடன் நீண்ட நேரம் பேசி இருக்கிறோம், மனிதாபிமான உணர்வோடு ஒருவரையும் கைவிடக்கூடாது என்ற உணர்வில் இந்த அரசு இருக்கிறது. நாங்கள் பல யோசனைகளை சொன்னதோடு, அவர்களுக்கு 3 சலுகைகளையும் வழங்கி உள்ளோம்.

மாவட்ட சுகாதார சமூகம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் அவர்கள் சேரும்போது, அவர்களுக்கான சம்பளம் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். முன்பு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில்தான் வேலை செய்தார்கள். இப்போது அவர்களுக்கு சொந்த ஊர் பக்கமே பணி கிடைக்கும். மேலும் எம்.ஆர்.பி. மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளோம்.

வருகிற 9–ந் தேதி (நாளை), 10–ந் தேதி (நாளை மறுதினம்) ஆகிய தேதிகளில் மாவட்ட சுகாதார சமூகம் மூலம் நர்சு பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. அதில் அவர்கள் விண்ணப்பம் செய்து, சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நர்சுகள், டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கின்றன. குளறுபடிகளும் நடந்துள்ளன. அதனை விசாரிக்க முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *