டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது
சென்னை, மே 5–
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் டெல்லியில் பதுங்கியிருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, மார்ச் மாதம் 9–ந் தேதி ஒயிட்ஸ் ரோடு, சுமித் ரோடு சந்திப்பில் கண்காணித்து, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் வைத்திருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வெளிநாட்டை சேர்ந்த 5 பேரை கைது செய்தும், இவர்களிடமிருந்து மொத்தம் 6 கிராம் மெத்தபெட்டமைன், 250 கிராம் கஞ்சா, 4 லேப்டாப், ரொக்கம் ரூ.3500-, 2 எடை இயந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு போதைப் பொருட்களை விற்பனை செய்த கோட் டி ஐவரி என்ற ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அபௌவ், புதுடெல்லியில் மறைந்திருந்தவரை புலன் வைத்து அண்ணா சாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தனிப்படையினர் கைது செய்தும், அவருக்கு உதவியாக இருந்த ராகுல் ஆகிய பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து 15 கிராம் கொக்கைன், 7 கிராம் ஹெராயின், 3 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் பணம் ரூ.50 ஆயிரம்- ஆகியவை கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 எதிரிகளையும், புது டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.