சென்னை, ஜன. 13–
சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார் போல் சென்னையில் போகிப்பண்டிகையை இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பழைய பொருட்களை தீயில் இட்டு கொளுத்தி மக்கள் போகிப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது. சென்னையில் பல பகுதிகளின் Air Quality Index (AQI) இங்கே தரப்பட்டு உள்ளது. இதில் ராயபுரத்தில் மதிப்பு 200ஐ தாண்டி மோசமான நிலையை அடைந்தது.
இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, பெங்களூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.