செய்திகள்

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள், சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு ரூ.21 லட்சம் அபராதம்

சென்னை, மார்ச் 23–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3.3.2023 முதல் 16.3.2023 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 77 ஆயிரத்து 600 – அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 900 – அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 500 – அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுஇடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிகக் குப்பைகள் காணப்பட்டால், பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *