அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்
சென்னை, ஜூன் 22–-
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் டிரைவர்கள் இயக்கும் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–-
சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்த பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கி 200 இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் இந்த ஆட்டோக்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
அதேபோல கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றை மகளிர் நல வாரியம் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 200 பேருக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரைஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசுபணிபுரியும் மகளிர்விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
இதுதவிர 6 அரசு சேவை இல்லங்கள் மற்றும் 27 அன்னை சத்யா குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள மாணவிகளுக்கு ரூ.1 கோடியில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கவும், அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிப்பான் இயந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதரவற்ற முதியோர் நலனுக்காக திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, நாகூர், வேளாங்கண்ணி, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய 7 சுற்றுலா தலங்களில் ரூ.40 லட்சத்தில் முதியோர் இல்லங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5,590 குழந்தைகள் மையங்கள் ரூ.55 கோடியில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகளை கண்காணிக்க 29,236 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.34.50 கோடியில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.
குழந்தைகள் மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உயரம் மற்றும் எடையை அளவிடும் 4 வகையான வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் ரூ.14.18 கோடியில் புதிதாக மாற்றப்படும். சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.