செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது

சென்னை,ஜூலை 2–

பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து சென்னையிலும் இன்று விலை ரூ.100 ஐ கடந்தது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், மத்திய–மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது வரியை விதிப்பதாலும், நாடு முழுவதும் பெட்ரோல் –டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், திருச்சி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களை தவிர 34 மாவட்டங்களில் கடந்த 27–ந்தேதி பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. அந்த வகையில் கோவை, மதுரை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர்-, தேனி, திருப்பத்தூர்-, திருவண்ணாமலை, திருவாரூர்-, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், மயிலாடுதுறைஆகிய 34 மாவட்டங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா நெருக்கடி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார்களின் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *