செய்திகள்

சென்னையில் புயல் மழையை எதிர்கொள்ள களப்பணியில் 18 ஆயிரம் போலீசார்

மீட்பு குழுவினர் ஒத்திகை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டார்

சென்னை, டிச.3–-

‘மிக்ஜம்’ புயல் பாதிப்பை எதிர்கொள்ள சென்னை போலீஸ்துறையும் ஆயத்தமாகி உள்ளது. 18 ஆயிரம் போலீசார் களப்பணியில் ஈடுபட உள்ளனர். 12 பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மீட்பு உபகரணங்களுடன் முகாமிட்டுள்ள போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினரின் மீட்பு ஒத்திகையை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டார்.

வங்கக்கடலில் உருவாகும் ‘மிக்ஜம்’ புயலால் சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே புயல் பாதிப்பை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. சென்னை போலீஸ்துறை சார்பிலும் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மீட்பு உபகரணங்களுடன் போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் முகாமிட்டு உள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மீட்பு குழுவினரை நேற்று சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்களையும் பார்வையிட்டார்.

பின்னர் கமிஷனர் முன்னிலையில் மீட்பு குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் கமிஷனர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் ஷரத்கர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை போலீஸ் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறும்.

* ஒவ்வொரு மீட்பு குழுவிலும் (மொத்தம் 12 குழுக்கள்) ஒரு தலைமை காவலர் தலைமையில் 10 போலீசார் இடம்பெற்றுள்ளனர்.

* மீட்பு பணிகளுக்காக ஒவ்வொரு குழுவுக்கும் தலா ஒரு வாகனம், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு உள்பட 21 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவசர செயலாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும்.

* சென்னை போலீஸ்துறையில் உள்ள சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு உள்பட சிறப்பு பிரிவுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 18 ஆயிரம் பேர் புயல் மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போக்குவரத்தை

ஒழுங்குப்படுத்துதல்

* போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் மீட்பு பணிகளில் 2,500 போலீசார் ஈடுபடுவார்கள். மேலும் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 200 பேரும், போக்குவரத்து வார்டன்கள் 100 பேரும் ஈடுபட உள்ளனர்.

* சென்னை போலீஸ்துறை, மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், மெட்ரோ ரெயில், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த இந்த துறைகளுடன் ‘வாட்ஸ்-அப்’ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* அனைத்து போலீஸ் நிலைய ரோந்து வாகனங்களும் தங்களது போலீஸ் எல்லைக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

* பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பர பலகைகள், புயல் காற்றினால் பறக்கக் கூடிய பிளாஸ்டிக் இரும்புத்தகடு, கட்டுமான பணியில் உள்ள கண்ணாடி மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட இலகு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ரோந்து வாகன போலீசார் மூலம் அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர உதவி எண்கள்

* புயல் காரணமாக இடர்ப்பாடு மற்றும் அவசர உதவிக்கு போலீஸ்துறையின் அவசர உதவி எண்-100, 112, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண்.1913, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண். -101 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் – போலீசார் அறிவுரை

புயல் காரணமாக சென்னை போலீஸ்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* புயல் கரையை கடந்துவிட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

* கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்.

* இடி, புயலின் போது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *