போஸ்டர் செய்தி

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்

சென்னை, ஜன. 1–
2019 புத்தாண்டு பிறந்ததையொட்டி நேற்று நள்ளிரவு சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மெரினா கடற்ரையில் சரியாக 12 மணிக்கு அங்கு கூடியிருந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடற்கரையில் பட்டாசுகள் வெடித்தும் வண்ண வண்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டும் மகிழ்ந்தனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டையொட்டி கூடியிருந்தனர். உழைப்பாளர் சிலை அருகிலிருக்து காந்தி சிலை வரை இளைஞர்கள் உற்சாக வெள்ள்ளத்தில் மிதந்தனர்.
நேப்பியார் பாலத்திலிருந்து காந்தி சிலை வரை 10 மணிக்கு மேல் வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
புத்தாண்டு கொண்டாடுவதற்காக நேற்று மாலை 7 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியளித்தன.
நள்ளிரவு 12 மணிக்கு கடிகாரத்தில் இரு முட்களும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்ததும் அங்கு கூடியிருந்த ஆண்களும், பெண்களும் உற்சாக வெள்ளத்தில் ஹேப்பி நியூ இயர் என விண்ணதிர கோஷங்களை எழுப்பியும் வண்ண வண்ண வான வேடிக்கைகள், பட்டாசுகள் வெடித்தும் பலூன்களை பறக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இளைஞர்களோடு இளம் பெண்களும் உற்சாகமாக ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவர்களோடு வந்திருந்த குழந்தைகளும் ‘ஹேப்பி நியூ இயர்’ என கோஷங்களை எழுப்பியவாறே சென்றனர். நள்ளிரவு 1 மணியளவிலும் மக்களின் உற்சாக வெள்ளத்தில் மெரினா மிதந்தது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் காந்தி சிலை அருகே புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடினார். அவர் தனது சக அதிகாரிகளுக்கு வாயில் கேக்கை ஊட்டி மகிழ்ந்தார். பொதுமக்களுக்கும் கேக் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அரணாக நின்றனர். இதனால் மெரினாவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. உழைப்பாளர் சிலை அருகிலும் அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, போன்ற பகுதிகளிலும் நேற்று மாலை 7 மணி முதல் கூட்டம் நிரம்பி வழிந்தது. இணை ஆணையர் அன்பு, துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சென்னை நகரின் பல இடங்களிலும் அனைத்து முக்கிய சாலை சந்திப்புகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இதே போல் நட்சத்திர ஓட்டல், மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுகளும், பெண்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர்.
தேவாலயங்களில்
சிறப்பு பிரார்த்தனை
சென்னையில் சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு நடைபெற்றது. சாந்தோம் பேராலயத்தில் மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை வெஸ்லி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் உள்ளிட்ட பல்வேறு தேவலாயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
புத்தாண்டையொட்டி கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் உயிரியியல் பூங்கா ஆகியவற்றில் இன்று காலை 8 மணியிலிருந்தே கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானவர்கள் குடும்பத்தாருடன் பூங்காக்களில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள். சிலர் அங்கேயே அமர்ந்து புத்தாண்டு உணவுகளை சாப்பிட்ட காட்சியையும் காண முடிந்தது.
பூங்காக்களில் உள்ள மான், குரங்கு, முதலை, ஓநாய், போன்ற விலங்களுக்கு புத்தாண்டு பரிசாக இறைச்சி போன்ற உணவுகளையும் அங்கு வந்த பொதுமக்கள் பாசத்தோடு வழங்கி மகிழ்ந்தனர். அழகிய பறவைகள் கிளி, வெள்ளை மயில் போன்றவற்றுக்கு பழங்களையும் அவர்கள் வழங்கினர். உணவு வழங்கியதில் குஷியடைந்த விலங்குகள் பதிலுக்கு பொதுமக்களுக்கு பல்வேறு சாகசங்களை காட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தன. சிறுவர் சிறுமிகள் அங்குள்ள சறுக்கு, ஊஞ்சல் போன்றவற்றில் விளையாடி தங்கள் பொழுதை களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *