9 பேர் கைது
சென்னை, ஜன. 30–
சென்னையில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் -– ராதா தம்பதியினரின் மகன் தனுஷ் (24). குத்துச்சண்டை வீரரான இவர், தமிழகம் சார்பில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். போலீஸ் பணிக்காக தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தனுஷ் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இதனால் இவர் காவல்துறை தேர்வுக்குத் தயாராக முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓட ஓட வெட்டிக் கொலை
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தனுஷ் தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தனுஷை ஓட ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தைத் தடுக்க சென்ற அருண் என்பவரையும் இந்த கும்பல் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலை முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்ட அருணை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனிடையே, இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.