செய்திகள்

சென்னையில் பிரதமர் தொடங்கி வைத்த 11 மக்கள் நலத்திட்ட பயன்கள் என்னென்ன?

மத்திய அரசு தகவல்

சென்னை, மே 27-–

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த 11 மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் என்னென்ன? என்பது பற்றி மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.31 ஆயிரத்து 530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அவற்றில் 5 திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டு நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. மீதமுள்ள 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

இதுபற்றிய புத்தக தொகுப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டம்

* தாம்பரம் – -செங்கல்பட்டு இடையே 3–-வது ரெயில்வே வழித்தடம். அதன் செயல்திட்ட மதிப்பு -ரூ.598 கோடி மற்றும் நீளம் -30.கி.மீ. ஆகும். இதன் மூலம் பயணிகள் தங்குதடையற்ற பயண அனுபவத்தை பெறுவதற்காக சென்னை கடற்கரை- – செங்கல்பட்டு பிரிவில் கூடுதல் புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும்.

* லைட் அவுஸ் செயல் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 1,152 வீடுகள். செயல்திட்ட மதிப்பு -ரூ.116 கோடி. இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்தால் வசிப்பிடம் உடனடியாக கட்டப்பட்டு அதிகவசதிகளுடன் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்கும்.

* மதுரை – -தேனி ரெயில்வே வழித்தடம் (கேஜ் மாற்ற செயல்திட்ட மதிப்பு -ரூ.506 கோடி) நீளம் -75 கி.மீ. ஆகும். கேஜ்மாற்ற செயல்திட்டங்களினால் ரெயில் போக்குவரத்தை நம்பகமானதாகவும், விரைவானதாகவும் ஆக்கும். அதன் விளைவாக வேளாண்மை, உள்ளூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு நன்மைகள் கிடைக்கும். அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* ஈ.டி.பி.பி.என்.எம்.டி. இயற்கை எரிவாயு குழாய் எண்ணூர் – -செங்கல்பட்டு பிரிவு வழியாக கொண்டு செல்லுவதற்கான செயல்திட்ட மதிப்பு -ரூ.849 கோடி, நீளம் -115 கி.மீ. ஆகும்.

* ஈ.டி.பி.பி.என்.எம்.டி. இயற்கை எரிவாயு குழாய் திருவள்ளூர் – -பெங்களூரு பிரிவு வழியாக கொண்டு செல்வதற்கான செயல்திட்ட மதிப்பு ரூ.911 கோடி, நீளம் -271 கி.மீ. ஆகும். இயற்கை எரிவாயு குழாய் பாதை, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தூய்மையான மற்றும் பசுமையான எரிபொருள்களை வழங்க முடியும்.

அடிக்கல் நாட்டிய திட்டம்

* சென்னை – -பெங்களூரு விரைவு வழி சாலையில் செயல்திட்ட மதிப்பு ரூ.14,872 கோடி, நீளம் -263 கி.மீ. ஆகும். சென்னை – -பெங்களூரு இடையிலான பயண நேரத்தில் 2 முதல் 3 மணி நேரம் குறைவதுடன், பாதுகாப்பு அதிகரித்து வாகனத்தை இயக்க நேரமும் குறையும்.

* நெரலூருவில் இருந்து தர்மபுரி பிரிவு 4 வழி தேசிய நெடுஞ்சாலையின் செயல்திட்ட மதிப்பு ரூ.3,871 கோடி, நீளம் 95 கி.மீ. ஆகும். இதன் காரணமாக பெங்களூரு – -தர்மபுரி இடையே 20 கி.மீ. தூரம் குறைவதுடன், ஓசூர்- – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பிரிவில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படும்.

* மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பிரிவில் இருவழிச் சாலை அமைக்கும் செயல்திட்ட மதிப்பு ரூ.724 கோடி. நீளம் 32 கி.மீ. ஆகும். இந்த திட்டத்தின் மூலம் முக்கிய புனித தலங்களான திருச்சி – -சிதம்பரம் இடையேயான பயண நேரம் குறையும்.

* துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் 4 வழி இரண்டடுக்கு உயர்மட்ட சாலையின் செயல்திட்ட மதிப்பு ரூ.5,852 கோடி, நீளம் 21 கி.மீ. ஆகும். இதன் மூலம் சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் வந்து செல்ல ஏதுவாக அமையும். போக்கு வரத்து நெரிசல் மிகவும் குறையும்.

* சென்னையில் பல்வகை வழிமுறைகளுடன் கூடிய லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைப்பதற்கான செயல்திட்ட பெறுமானம் ரூ.1,428 கோடியாகும். இதன் மூலம் பலவகை செயல்களுடன் கூடிய தங்கு தடையற்ற சரக்கு நகர்வுகளால் சரக்கு சார்ந்த செலவீனம் குறையும்.

* சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் மறு உருவாக்கம் செயல்திட்ட மதிப்பு ரூ.1,803 கோடியாகும். இந்த மறு உருவாக்கத்தினால் பயணிகள் வருகை மற்றும் வெளியேற்றம் தனியான பகுதிகளில் அமைக்கப்படுவதால், பயணிகள் சுலபமாக வந்து செல்ல முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.