சென்னை, நவ. 30–
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்ட்ரல், கிண்டி, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காக மக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே உள்ளனர்.
சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். மழைநீர் எங்கு எல்லாம் தேங்கி இருக்கிறதோ அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையின் மையப்பகுதிகள் மட்டும் அல்லாது புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னையில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம் வருமாறு:–எண்ணூர் – 13 செ.மீ., கத்திவாக்கம் – 12 செ.மீ., பேசின் பிரிட்ஜ், திருவொற்றியூர் – 9 செ.மீ., தண்டையார்பேட்டை, பொன்னேரி – 8 செ.மீ., மணலி, ஐஸ் ஹவுஸ், சென்ட்ரல், அடையார், ஆலந்தூர், கொளத்தூர், மாதவரம் – 7 செ.மீ., நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், புழல், வடபழனி, மடிப்பாக்கம், ஆவடி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம் – 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.
பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண் – 1077, வாட்ஸ்–அப் 9445869848 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசிய தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:-
* சென்னை மாநகராட்சி –1913
* மின்சாரம் – 94987 94987
* குடிநீர் –044-4567 4567
* பாம்பு மீட்பு படை – 044 – 2220 0335
* சென்னை மெட்ரோ ரெயில் – 18604251515
* ப்ளூ கிராஸ் – 9677297978, 9841588852, 9176160685
* மகளிர் உதவி எண் – 181
* சைல்டு லைன் – 1098.
#பெஞ்ஜல் புயல் #cyclone #chennairains