போஸ்டர் செய்தி

சென்னையில் நாளை பிரதமர் மோடி பிரச்சாரம்

சென்னை,மார்ச்.5–
சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்துக்கு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பு தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்ணா.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியில் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் தனியாக போட்டியிடும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதமே தொடங்கி விட்டனர். மாநிலம், மாநிலமாக சென்று அவர்கள் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.
3 முறை வந்தார்
அந்த வகையில் பிரதமர் மோடி ஏற்கனவே 3 தடவை தமிழகம் வந்து மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கும் முன்பு மீண்டும் ஒரு தடவை பிரதமர் மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6- ந் தேதி (நாளை) தமிழகம் வர சம்மதித்தார். இந்த தடவை மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது சில அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் விழாவுக்கு தனி மேடையும், பிரச்சாரம் செய்வதற்கு தனி மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காலை கர்நாடகா வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிறகு பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
அதன் பிறகு மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 4.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சுமார் 2 மணி நேரம் அவர் சென்னை கூட்டத்தில் இருப்பார் என்று தெரிகிறது.
மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு பிரதமர் மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு செல்வார்.
சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அண்ணா தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார்கள். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்கிடையே அண்ணா.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொண்டு, நாளைய பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்தையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதில் அண்ணா.தி.மு.க. -–பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.
அப்போது தொகுதி பங்கீடு பற்றி சுமார் 1 மணி நேரம் பேசப்பட்டது. சில சிறிய வி‌ஷயங்கள் தவிர பெரிய கோரிக்கைகள், நிபந்தனைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே அண்ணா.தி.மு.க. கூட்டணியில் இன்று தே.மு.தி.க. சேரும் என்று தெரிகிறது.
அது உறுதியாகும் பட்சத்தில் நாளை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க வாய்ப்புள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் நாளை ஒரே மேடைக்கு வருவதால் சென்னை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *