செய்திகள்

சென்னையில் நடைபெற இருந்த ‘பார்முலா-–4’ கார் பந்தயம் தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, டிச.6-

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னை ‘பார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட்’ பந்தயம் என்ற ‘பார்முலா-4’ கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கார் பந்தயத்திற்கு தமிழக அரசு ரூ.40 கோடி தொகையை ஒதுக்கியுள்ளது.

இந்தநிலையில் இந்த பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மைதானத்தில் நடத்த வேண்டும் என்றும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ஸ்ரீஹரீஷ் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். வேறு சிலரும் இந்த வழக்கில் தனித்தனியாக மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரிக்கின்றனர். கடந்த விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், இதுபோன்ற கார் பந்தயங்கள் மூலம் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதற்கு அரசு நிதி ஒதுக்கினாலும், பந்தயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தனியாருக்குத்தான் செல்கிறது என்று வாதிடப்பட்டது.

பந்தயம் நடைபெறும் இடத்தில் குடியிருப்புகள் இல்லை. போட்டி நடைமுறைகளின்படிதான் பந்தயம் நடத்தப்படுகிறது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. போட்டியை அரசு நடத்தாத நிலையில் ஏன் அவ்வளவு அதிக நிதியை அரசு ஒதுக்கியது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

எனவே வரும் 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சென்னை ‘பார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட்’ பந்தய நிகழ்வுகள் (பார்முலா – 4 கார் பந்தயம்) தமிழக அரசால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *