சென்னை, செப்.19-
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் என சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான ‘அசோசெம்’ சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியில் 42 சதவீத பங்களிப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தில் 30 சதவீத பங்களிப்பையும வழங்குகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. ஏற்றுமதியில், இந்திய அளவில் தமிழ்நாடு 9.5 சதவீதம் பங்களித்து 3-ம் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 26 லட்சத்து 61 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலகளவில் உயர்த்திடும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ.47 கோடியே 62 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப கருவிகளை உலகத் தரத்தில் பரிசோதிக்கும் உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடம் விரைவில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமத்திற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது.அசோசெம் போன்ற தொழில் கூட்டமைப்பினர் அரசின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தங்களின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.