செய்திகள்

சென்னையில் தொடர் மழை: புத்தகக் கண்காட்சி இன்று ரத்து: பபாசி அறிவிப்பு

சென்னை, ஜன. 8–

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று புத்தகக் கண்காட்சி நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது.

47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வாசகர்கள் தினமும் கலந்து கொண்டு ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் திடீர் மழை காரணமாக ஒய்.எம்.சி.ஏ. மைதானம் சேரும் சகதியுமாக காட்சியளித்தது. வாகனங்களை நிறுத்தும் இடத்திலும், புத்தக காட்சியின் நுழைவாயில் அருகிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாசகர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். சில புத்தக அரங்குகளுக்கு உள்ளேயும் ஆங்காங்கே மழை நீர் கசிந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒருநாள் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறாது என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) தெரிவித்துள்ளது.

இது குறித்து பபாசி நிர்வாகம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “47வது சென்னை புத்தகக் காட்சி இன்று விடுமுறை. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மழைநீர் கசியும் இடங்களில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *