செய்திகள்

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

Makkal Kural Official

3வது கொள்ளையன் ஆந்திராவில் கைது

சென்னை, மார்ச் 26–

சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் (28) என்பவரை போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன. இப்படி காலை 6 முதல் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து பெண்களை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், தென் சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கினர்.

இதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் மட்டுமே எனத் தெரியவந்தது. மேலும் அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றதும் தெரிந்தது. எனவே, இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், புறப்படத் தயாராக இருந்த ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட விமானங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்தனர்.

அதில் 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களான இருவரும் திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட கொள்ளையரில் ஒருவரான ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் விசாரணையில் தரமணி ரெயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாபர் குலாம் ஹுசைன் உயிரிழந்துள்ளார்.

பலியான ஜாபர் குலாம் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் குலாம் பயன்படுத்திய டூவீலர், கைத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாபர் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின் 4வது என்கவுன்டர் நடைபெற்றுள்ளது.

3வது கொள்ளையன் ஆந்திராவில் கைது

இந்த நிலையில் சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கொள்ளையன் தப்பி சென்ற ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிறுத்தப்பட்டது. தப்பி சென்ற 3-வது கொள்ளையனான சல்மானை ஓங்கோல் பகுதியில் வைத்து ஆந்திர ரெயில்வே போலீசார் கைது செய்து சென்னை போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *