சென்னை, ஜூலை 8–
சென்னையில் 8 வயது சிறுவன் தெரு நாய் தாக்குதலால் படுகாயம் அடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்து சில தினங்களாக பொதுமக்கள் நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கிறது. சென்னையில் வளர்ப்பு நாய் மட்டுமல்லாமல் அவ்வப்போது சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை குறிப்பாக சிறுவர்களை தெரு நாய்கள் துரத்தி தாக்கும் சம்பவமும் நடக்கின்றது. சென்னையில் வளர்ப்பு நாய் தாக்குதலால் இரண்டுக்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சென்னையில் மீண்டும் தெருநாயால் 8 வயது சிறுவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டை, சேனியம்மன் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 42) சமையல் தொழிலாளி. இவரது மகன் கவுரிநாத் (வயது 8) அதே பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கவுரிநாத் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றபோது திடீரென அங்கிருந்த தெரு நாய் அவனை விரட்டி விரட்டி தாக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நாயிடம் இருந்து சிறுவனை மீட்டு, அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் உடனடியாக சிறுவன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
தெரு நாய் கடித்ததில் தோள்பட்டையில் காயமடைந்த சிறுவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனை காப்பாற்ற சென்ற சிலரையும் அந்த வெறி நாய் கடித்ததாகவும், இதனை அடுத்து மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் வெறிநாயை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாய்கள் மனிதர்களை கடித்தால் அந்த நாயை வளர்ப்பவர்கள் தான் பொறுப்பு என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது என்பதும் நாய் வளர்ப்பவர்கள் உடனடியாக லைசன்ஸ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.
சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுத்தும் அவ்வப்போது தெருநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.