சென்னை, மார்ச் 5–
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துவருகிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.
இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து நாளை அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு. அறிவித்துள்ளது.