செய்திகள்

சென்னையில் ஜி–20 நிதி கட்டமைப்பு மாநாடு: உலகப்பொருளாதார நிலை குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகள் விவாதம்

சென்னை, மார்ச்.25-

சென்னையில் நேற்று தொடங்கிய ஜி20 நிதி கட்டமைப்பு மாநாட்டில் உலகப்பொருளாதார நிலை குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகள் விவாதித்தனர். இதன்பின்பு நடந்த கலைநிகழ்ச்சிகளில் அவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, தென் ஆப்ரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை கொண்ட ஜி20 நாடுகளின் 2023-ம் ஆண்டின் தலைமைப்பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டை மத்திய அரசின் தலைமைப்பொருளாதார ஆலோசகர் அன்ந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப்பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டு வரும் விலை ஏற்றம் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பொருளாதார மந்த நிலையால் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், இதனைத்தடுக்க மத்திய வங்கிகள் எடுக்கவேண்டிய கொள்கை குறித்தும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்தனர்.

உலகப்பொருளாதார நிலை குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஐ.நா. சார்பில் ஜி20 உறுப்பினர் அலெஜான்ட்ரோ பெடெரிகோ இசுரியேட்டா கனோவா பங்கேற்று பேசினார்.

ரஷியாவைச்சேர்ந்த டைட்டியனா லூதியானா கூறும்போது, ‘இந்தியா இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளது. இந்த மாநாடு மிக பயனுள்ளதாக இருந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் நேரில் வந்து கருத்தரங்கில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறோம்’ என்றார்.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஜூலியன் ஆர்தர் கூறும் போது, ‘உலக வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய வட்டி விகிதங்கள் பொருளாதார ஊக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது’ என்றார்.

இந்த மாநாடு இன்றும் (சனிக்கிழமை) நடக்கிறது.

தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை வெளிநாட்டு பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *