செய்திகள்

சென்னையில் ‘கிரெடாய்’ ரியல் எஸ்டேட் கண்காட்சி: 70 நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை, பிப்.18–-

‘கிரெடாய்’ சார்பில் தென்னிந்தியாவின் பிரமாண்ட ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

கண்காட்சியை கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன், செயலாளர் கிருதிவாஸ், முன்னாள் தலைவர்கள் பிரகாஷ் செல்லா, சிட்டிபாபு, சந்தீப் மேத்தா, அஜித் சோர்டியா, சுரேஷ் கிருஷ்ணன், ஹபீப், பதம் துகார், எஸ்.பி.ஐ. வங்கி தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய வங்கி கிளப் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி, கண்காட்சி குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி நாளை (19–ந் தேதி) வரை நடைபெற இருக்கிறது.

இந்த கண்காட்சியில் 70-–க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தங்களின் வீட்டு மனைகள், வீடுகள், வில்லாக்கள் மற்றும் வணிக இடங்கள் உள்ளிட்ட 450-–க்கும் மேற்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்தி இருக்கின்றன.

வீடு, இடம் வாங்க ஆவலோடு காத்திருப்பவர்களுக்கு இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் விருப்பமான வீடுகள், இடங்களை வாங்கலாம். வீடு, இடங்கள் வாங்குபவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாதபடி, அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

5 அதிர்ஷ்டசாலிகளுக்கு

ரூ.1 லட்சம் பரிசு

இந்த கண்காட்சியில் வீடு, இடங்களை பதிவு செய்பவர்களில் 5 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்க இருப்பதாக கிரெடாய் சென்னை அறிவித்துள்ளது.

கண்காட்சி குறித்து கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் கூறும்போது, ‘அனைவருக்கும் வீடுகள் எனும் நோக்கத்துடன் இந்த கண்காட்சியில் சிறந்த விலை மற்றும் சிறப்பு சலுகைகளில் வீட்டு மனைகள், வில்லாக்கள், வீடுகள், வணிக இடங்கள் இடம்பெற்று உள்ளன. வீடு வாங்குபவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் உடனடி வங்கி கடன் வசதியையும் இங்கு பெறலாம். வரும் காலங்களில் சொத்து மதிப்பு மேலும் உயரும் என்பதால், வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட் துறையில் கனவு முதலீட்டை செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த கண்காட்சி சிறப்பான ஒன்று’ என்று கூறினார்.

க்ருதிவாஸ்

கிரெடாய் சென்னை செயலாளரும், கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான க்ருதிவாஸ் கூறுகையில்,

அடுத்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி காணும் சூழல் நிலவி வருகிறது. தற்போது உலக அளவில் மந்தநிலை இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டு கண்காட்சி வெற்றிகரமாக அமைந்தது என்றார்.

நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 68 சதவீத விற்பனை பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு கண்காட்சியில் மொத்தம் 250 சொத்துகள் பதிவு செய்யப்பட்டது. இதன் வருவாய் 200 கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்பனைக்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால் அதையும் தாண்டி விற்பனையானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *