செய்திகள்

சென்னையில் கடந்த ஆண்டை விட கொள்ளை, செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்தன புள்ளி விபரங்களுடன் கமிஷனர் விசுவநாதன் விளக்கம்

சென்னை, மே 20

கண்காணிப்பு கேமிராக்களின் வளையத்துக்கள் சென்னை கொண்டுவரப்பட்டதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் 48 சதவீத செயின் பறிப்பு, 24 சதவீத கொள்ளை நிகழ்வுகள் குறைந்துள்ளன என்று சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் கூறினார்.

சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் ஒரே குடையின் கீழே கொண்டு வருவதற்காக தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு, வழிப் பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் நடந்தால் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய மோப்ப நாய், தடயவியல் நிபுணர், சந்தர்ப்ப சாட்சியங்கள் என பலரது உதவி தேவைப்பட்டது. இதுபோக போலீசாரின் சாதுர்யமும் அவசியமானது. குற்றவாளிகளைக் கைது செய்யவும், அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் அதிக காலமானது.

ஆனால், தற்போது சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுகின்றனர். குற்றங்களைத் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்ற வாளிகளைக் கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் துருப்புச் சீட்டாக உள்ளன. மேலும் பல குற்ற நிகழ்வுகள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.

இதன் முக்கியத்துவத்தை அறிந்து சென்னை முழுவதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், ரயில் – பேருந்து நிலையங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து இடங் களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் கூறியிருப்பதாவது:

கண்காணிப்பு கேமரா குறித்து பொதுமக்களிடம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்தது. மேலும் நடிகர்கள் விவேக், விக்ரம், விஜய் சேதுபதி, செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் “மூன்றாவது கண்’ என்ற பெயரில் பங்கேற்று நடித்த 4 விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டன. இதனால் எதிர்பார்த்தபடி, பொதுமக்களிடமிருந்து கண்காணிப்பு கேமரா பொருத்துவற்கான ஆதரவு பெருமளவு கிடைத்தது. இதன் முதல் கட்டமாக யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதி முழுமையான கண்காணிப்பு கேமராவுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தியாகராயர் நகர், அண்ணாநகர், பூக்கடை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வேப்பேரி என அடுத்தடுத்து நகரின் பெரும்பாலான பகுதிகள் “மூன்றாவது கண்’ பார்வைக்குள் கொண்டு வரப்பட்டன.

சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில், 48 உதவி ஆணை யர்கள் மேற்பார்வையில் 135 காவல் நிலைய ஆய்வாளர்கள் கண் காணிப்பு கேமரா நிறுவும் பணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக துரிதப்படுத்தினர். விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையடுத்து 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்ற இலக்குடன் காவல்துறையினர் செயல்படத் தொடங்கினர். எந்தப் பகுதியும் விடுபடாமல், மிகவும் கவனமாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. இத்தகைய நடவடிக்கையால், நகரில் இப்போது 2.55 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. இத்தகைய தீவிர தொடர் நடவடிக்கை காரணமாக, நகரின் பல இடங்களில் இப்போது 30 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களை நோக்கி இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் சென்னையில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளது. சுமார் 70 சதவீத குற்ற வாளிகள் சிசிடிவி மூலம் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.1.2018 முதல் 30.04.2018 வரை 159 செயின் பறிப்பு வழக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளன. ஆனால் 1.1.2019 முதல் 30.04.2019 வரை 82 செயின் பறிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகி 48 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் கொள்ளை வழக்குகள் 211 பதிவாகி 24 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன. பொது இடத்தில், பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் தகராறு செய்த வழக்குகள் 14,457. வழக்குகள் குறைவாக பதிவாகி 11 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன. கொடுங்காய வழக்குகள் 42 சத வீதம் குறைந்துள்ளன. கண் காணிப்பு கேமராக்கள் மக்க ளுக்கு பாதுகாப்பு உணர்வை அளித்துள்ளன.

இவ்வாறு கமிஷனர் விசுவநாதன் கூறியுள்ளார்.

சென்னையின் நுழைவாயில்களாக இருக்கும் பெருங்களத்தூர், மாதவரம், பூந்தமல்லி, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், தியாகராயர் நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், எழும்பூர், மீனம்பாக்கம், தாம்பரம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த இரு வகை கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, நகரில் பொருத்தப்பட்டுள்ள 2.55 லட்சம் கேமராக்களை ஒரே குடையின் கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர். ஏனெனில் இப்போது ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு தனித்தனியாக கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. இதனால் தகவல்களை ஒருங்கிணைப்பதிலும், தகவல்களை பரிமாறிக் கொள்வதிலும் அவ்வப்போது இடர்பாடு ஏற்படுகிறது.

இக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்ட பின்னர், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மேலும், நகருக்குள் எத்தகைய குற்றச் செயலில் யார் ஈடுபட்டாலும் சில நிமிஷங்களில் அடையாளம் காணப்பட்டு, சில மணி நேரங்களில் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *