செய்திகள்

சென்னையில் கடத்தப்பட்ட பெண் டாக்டரின் 3½ வயது குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு

Spread the love

சென்னை, ஜுலை.19–

சென்னையில் கடத்தப்பட்ட பெண் டாக்டரின் 3 1/2 வயது குழந்தையை போலீசார் 10 மணி நேரத்தில் மீட்டனர். வீட்டு வேலைக்காரியே காதலனுடன் சேர்ந்து கடத்தி விட்டு நாடகம் ஆடியதாகவும், சினிமா படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டால் குழந்தையை கடத்தி ரூ. 60 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை, ஷெனாய் நகர், செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வசித்து வருபவர் அருள்ராஜ் (வயது 30). இவரது மனைவி நந்தினி (28). சாப்ட்வேர் என்ஜினியரான அருள்ராஜ் தாம்பரம் சானட்டோரியம் மெப்ஸ்சில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். டாக்டரான நந்தினி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஹவுஸ் சர்ஜனாக உள்ளார். இவர்களது மூன்றரை வயது பெண் குழந்தை அன்விகா. முகப்பேரில் உள்ள டிஏவி தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள். கடந்த 25 நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டில் அம்பிகா என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் பள்ளிக்கு சென்று விட்டு குழந்தை அன்விகா வழக்கம் போல பள்ளிக்கூட வேனில் வீட்டுக்கு வந்தாள். அப்போது வேலைக்காரி அம்பிகா குழந்தையுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்ட அம்பிகா தன்னையும், குழந்தையையும் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் அலறினார். சிறிது நேரம் கழித்து அதே போனில் பேசிய மற்றொரு நபர், இருவரையும் உயிரோடு விட வேண்டும் என்றால் உடனடியாக தனக்கு ரூ. 60 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் விஜயகுமாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அண்ணாநகர் துணைக்கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவிக்கமிஷனர் குணசேகரன் தலைமையில் குழந்தையை மீட்க இன்ஸ்பெக்டர்கள் பெருந்துறைமுருகன், ராஜேஷ் கண்ணா, சங்கர், சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் டாக்டர் நந்தினி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் செவ்ரோலட் காரில் அம்பிகா, குழந்தையுடன் ஏறிச்செல்வது தெரியவந்தது. இதனால் இந்த கடத்தலில் வேலைக்காரி அம்பிகாவுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

அம்பிகாவின் செல்போன் டவரின் விவரங்களை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்த போது அவரிடம் ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பரில் இருந்து ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த நபரின் செல்போன் டவரை ஆய்வு செய்த போது அவர் ரெட்ஹில்ஸ் என்ற இடத்தில் இருந்து பேசுவதை கண்டுபிடித்தனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார் கடத்தல் ஆசாமி முகமது கலீமுல்லா பயாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். டாக்டர் நந்தினி வீட்டில் வேலை செய்து வரும் அம்பிகா தனது காதலி என்றும் அவர் மூலம் டாக்டரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டதாக கலீமுல்லா போலீசாரிடம் தெரிவித்தார். குழந்தையை கோவளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அம்பிகாவுடன் தங்க வைத்திருப்பதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து தனிப்படை போலீசார் கோவளம் விரைந்து சென்று அங்கு தனியார் லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்த அம்பிகாவை கைது செய்தனர்.

பள்ளிச்சீருடையுடன் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார் அம்பிகா, முகமது கலீமுல்லாவையும் கைது செய்து அமைந்தகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட செவ்ரோலட் கார், இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். குழந்தை கடத்தப்பட்ட பத்து மணிநேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டது பாராட்டத்தக்க விஷயமாக அமைந்தது. நேற்று மதியம் 1.30 மணிக்கு குழந்தை கடத்தப்பட்டதாக டாக்டர் நந்தினி புகார் அளித்தார். இரவு 10.30 மணிக்கெல்லாம் போலீசார் குழந்தையை மீட்டனர். பத்து மணிநேரத்தில் போலீசார் துரிதமாக குழந்தையை மீட்டுள்ளனர்.

கைதான முகமது கலீமுல்லா போலீசாரிடம் அளித்த வாக்குமூல விவரம் வருமாறு: ‘‘ரெட்ஹில்ஸ் பிகே பட்டைச் சேர்ந்த நான் சினிமா தொழிலில் ஈடுபட்டு வந்தேன். சினிமாவில் பணத்தை முதலீடு செய்தால் நன்கு பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்த்து வந்த திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த அம்பிகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். அப்போதுதான் டாக்டர் நந்தினி ரூ. 10 ஆயிரம் சம்பளம் பேசி அம்பிகாவை தனது வீட்டில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சினிமா தொழிலில் ஈடுபட்டு பணக்காரர்களாக ஆக விரும்பினோம். அதனால் குழந்தையை கடத்த முடிவு செய்தோம். அதன்படி குழந்தை அவின்கா மதியம் 1 மணிக்கு பள்ளி வேனில் வீட்டு வாசலில் வந்து இறங்கினார். அவர்களை அங்கிருந்து நேராக எனது காரில் கோவளத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள லாட்ஜில் தங்க வைத்தேன். போலீசுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அம்பிகாவை அவரது செல்போனில் இருந்தே பேசவைத்தேன். நான் ரெட்ஹில்ஸ்சில் போய் பதுங்கிக் கொண்டேன். ஆனால் போலீசார் செல்போன் டவரை வைத்து என்னை பிடித்து விட்டார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *