செய்திகள்

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது

Makkal Kural Official

கடற்கரை- – செங்கல்பட்டு இடையே இயக்கம்

சென்னை, ஏப். 19–-

சென்னை கடற்கரை – -செங்கல்பட்டு இடையே சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் செய்யப்பட்டது.

பின்னர், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில் தயாரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை- – செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்பட்டது. அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது. இந்த ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைந்தது. மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.

ரெயில் அட்டவணை

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது. செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை வந்தடைகிறது. சென்னை கடற்கரையிலிருந்து மாலை 3.45-க்கு புறப்படும் ரயில் மாலை 5.25-க்கு செங்கல்பட்டு சென்றடைகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து மாலை 5.45-க்கு புறப்படும் ரயில் இரவு 7.15-க்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுபோன்று சென்னை கடற்கரை -– தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் பாதையில் ஏசி மின்சார ரயில் இரவு நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.35-க்கு புறப்படும் ரயில் இரவு 8.30-க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து (ஏப். 21 முதல்) அதிகாலை 5.45-க்கு புறப்படும் ரயில் 6.45-க்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கட்டண விபரம்

சென்னை கடற்கரையில் இருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆக இருக்கும். சென்னை கோட்டை, சென்னை பார்க், எழும்பூர் – ரூ.35, மாம்பலம் –- ரூ.40, கிண்டி,- பரங்கிமலை, திருசூலம் -– ரூ.60, தாம்பரம், பெருங்களத்தூர் -– ரூ.85, கூடுவாஞ்சேரி, பொத்தேரி – – ரூ.90 சிங்கப்பெருமாள் கோயில் –- ரூ.100, பரனூர், செங்கல்பட்டு -– ரூ.105.

இதே போல் மாதாந்திர சீசன் கட்டணமாக சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் ரூ. 620, செயின்ட் தாமஸ் மவுண்ட் ரூ. 1260, தாம்பரம் ரூ. 1705, பெருங்களுத்தூர், பொத்தேரி வரை ரூ. 1820, சிங்க பெருமாள் கோவில் ரூ. 2040, பரனூர் மற்றும் செங்கல்பட்டு ரூ. 2115 ஆகும். ஏ.சி. மின்சார ரெயிலுக்கு தனி கட்டணம் முறை உள்ளதால் சாதாரண மின்சார ரெயிலின் முதல் வகுப்பு மாதாந்திர சீசனை பயன்படுத்தி ஏ.சி. மின்சார ரெயிலில் பயணம் செய்ய முடியாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *