சென்னை, மார்ச் 2–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 8–ந்தேதி அன்று இளையராஜா முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதையொட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார். நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவில் இளையராஜாவும் முதல்வர் ஸ்டாலினும் அன்பொழுக பேசிக் கொள்ளும் காட்சிகள் வருகின்றன. வீடியோ பின்னணியில் மெளனராகம் படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு..’ பாடலின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் இசைக்கப்பட்ட இருவரின் சிரிப்பும் இணைந்து கொண்டது. இருவரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ‘காரில் போகும்போது எப்போதுமே உங்கள் இசையைத் தான் கேட்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் கூறினார். பின்னர், ‘இசைஞானி என்ற பெயரை ஐயா தான் வைத்தார். அதை மாற்றவே முடியவில்லை.” என்று ஸ்டாலினிடம் இளையராஜா நெகிழ்ந்தார்.அதற்கு ஸ்டாலின், “எத்தனை பட்டங்கள் வந்தாலும் கலைஞர் கொடுத்த இசைஞானி பட்டமே நீடிக்கிறது” என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து “உங்களுடைய பிறந்தநாள் ஜூன் 3 தான் ஆனால் ஜூன் 2 என்று மாற்றி வைத்துக் கொண்டீர்களே” எனக் கேட்க, “இல்லை அப்பாவுக்காக” என்றார் இளையராஜா.
கடந்தாண்டு, ‘ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி’, என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சிம்பொனியின் இசை பயணம் குறித்த முன்னோட்ட வீடியோ, யூ-டியூப்பில் வெளியானது. 9 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிம்பொனி இசையை இளையராஜா உருவாக்குவது முதல் வெளிநாட்டவர்கள் இளையராஜாவை பற்றி எடுத்துக்கூறுவது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளது.
தற்போது, இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் மார்ச் 8ம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.