செய்திகள்

சென்னையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை, நவ. 18–

சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மையம் கொண்டுள்ளதை அடுத்து 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவடைகிறது. தற்போது வட தமிழ்நாடு – தெற்கு ஆந்தரம் கடலோர பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்ந்து வருகிறது.

சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ரெட் அலெர்ட்’ மாவட்டங்கள்

இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலெர்ட்’ என்பது 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்வதை குறிப்பிடுவதாகும்) விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *