சென்னை, அக் 8–-
சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வெண்பட்டு திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் வழங்கப்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடைகள், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சாமி வீதிஉலா வரும்போது சாற்றப்படுவது வழக்கம்.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்துக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருக்குடைகள் சமர்ப்பண ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து கடந்த 2-ந் தேதி புறப்பட்டது. இந்த ஊர்வலம் திருப்பதி திருச்சானூரை நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. அங்கு 2 வெண்பட்டு திருக்குடைகளை திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில், அதன் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி சமர்ப்பித்தார்.
9 வெண்பட்டு
திருக்குடைகள்
இதையடுத்து 9 வெண்பட்டு திருக்குடைகள் திருப்பதி திருமலையை நேற்று காலை 9 மணிக்கு வந்தடைந்தன. திருமலையில் ஏழுமலையான் கோவில் கோபுர வாயில் அருகில், திருக்குடைகளுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, 9 வெண்பட்டு திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி சார்பில் அதன் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். திருக்குடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி மற்றும் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு 9 வெண்பட்டு திருக்குடைகளும் மேளதாளம் முழங்க திருமலை ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஏழுமலையான் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
நிதி வசூல் கிடையாது
திருக்குடைகள் சமர்ப்பணத்துக்கு பிறகு இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இருந்து திருப்பதி வரும் வழியெங்கும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்த திருக்குடைகளை வேங்கடமுடையானே நேரில் எழுந்தருளியதாக கருதி தங்களின் வேண்டுதல்களை தெரிவித்து வழிபட்டனர். இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி தனது சொந்த செலவில் செய்கிறது. இதற்கென யாரிடமும் எவ்வித நன்கொடையோ, நிதி வசூல் செய்வதோ, காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.