செய்திகள்

சென்னையில் இன்று மின்சார ரெயில்கள், மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின

சென்னை, டிச.7-–

சென்னையில் இன்று மின்சார ரெயில்கள், மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆவடி, பேசின்பிரிட்ஜ், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. பேசின்பிரிட்ஜ் – – வியாசர்பாடி இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடற்கரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. கூட்ட நெரிசலால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

மேலும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ள பாதிப்பு குறைந்ததால் சென்னை சென்டிரல் – ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்தில் நேற்று மதியம் 3 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரெயில் என இயக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று முதல் சென்னை சென்டிரல் -– அரக்கோணம், சென்னை கடற்கரை – – செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை -– வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

அதேநேரம் சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

அனைத்து வழித்தடங்களிலும்

மாநகர பேருந்து இயக்கம்

சென்னை மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. இதனால் சாலைகளில் தேங்கிக் கிடந்த தண்ணீர் வடிந்ததால், சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீராகியுள்ளது. மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *