செய்திகள்

சென்னையில் அரசு பஸ் பலகை உடைந்து ஓட்டை வழிய கீழே விழுந்த பெண் படுகாயம்

Makkal Kural Official

பஸ்களை முழுமையாக பரிசோத்து இயக்க அமைச்சர் சிவசங்கரன் உத்தரவு

சென்னை, பிப்.7-–

ஓடும் பஸ்சின் இருக்கை அடியில் பலகை உடைந்து ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் அரசு பஸ் (தடம் எண்:59) நேற்று மதியம் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. பஸ்சில் பயணிகள் அதிக அளவில் இருந்தனர். இந்நிலையில் அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஷானாஸ் (வயது 30) என்ற பெண் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்து நின்றார்.

அப்போது திடீரென இறுக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து விழுந்தது. அந்த ஓட்டை வழியாக அவர் அப்படியே காலை மடித்த நிலையில் கீழே விழுந்தார். இருப்பினும் அந்த பெண் சாதுரியமாக பஸ்சில் இருந்த கம்பியை உறுதியாக பிடித்துகொண்டார். அவரது கால் மட்டும் தரையில் உரசியபடி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அபய குரல் எழுப்பினார்.

இதை கண்டதும் அருகில் இருந்த சக பயணிகள் சத்தம் போட்டனர். உடனே டிரைவர் அவசரமாக பஸ்சை நிறுத்தினார். சிறிது தூரம் சாலையில் காலை தேய்த்தபடி தர, தரவென இழுத்து செல்லப்பட்ட அவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினார். சாலையில் அவரது கால் தேய்த்ததால் சிராய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக பொதுமக்கள் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று அந்த பெண் வீடு திரும்பினார்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ‘பணிமனையில் இருந்து பஸ்சை எடுக்கும் போது முறையாக கவனித்து எடுக்க மாட்டீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ் பழுதாகி விட்டதாக கூறி அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அங்கிருந்து பஸ்சை லாவகமாக எடுத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகர பேருந்தில் தீடீரென ஏற்பட்ட ஓட்டையில் பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக செய்திதாள்களில் வெளியான செய்தியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் காண்பித்து வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் அவசர முறையீடு செய்தார்.

போக்குவரத்து துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறினார். பின்னர் நீதிபதிகள், இதுகுறித்து பார்ப்பதாக தெரிவித்தனர்.

அமைச்சர் சிவசங்கரன்

உத்தரவு

இந்நிலையில் பஸ்களை முழுமையாக பரிசோத்து இயக்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும். சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *