செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் நைட்ரஜன் மாசு: பசுமை அமைதி இந்தியா ஆய்வு தகவல்

சென்னை, ஜூலை 9–

மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு, டெல்லி, சென்னை உட்பட எட்டு நகரங்களில் அதிகரித்துள்ளது என்று பசுமை அமைதி இந்தியா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பசுமை அமைதி இந்தியா சார்பில், “கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வில், டெல்லியில் நைட்ரஜன் ஆக்சைடு மாசு 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டை போலவே வானிலை இருந்திருந்தால் இது 146 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என்கிறது ஆய்வு.

சென்னையிலும் அதிகரிப்பு

டெல்லியுடன் ஒப்பிடுகையில் சற்று ஆறுதல் அளித்தாலும், மற்ற இந்திய நகரங்களும் நைட்ரஜன் ஆக்சைடு அளவு கவலையை அதிகரித்துள்ளன. மும்பை 52 சதவிகிதம், பெங்களூரு 90 சதவிகிதம், ஐதராபாத் 69 சதவிகிதம், சென்னை 94 சதவிகிதம், கொல்கத்தா 11 சதவிகிதம், ஜெய்ப்பூர் 47 சதவிகிதம், லக்னோ 32 சதம் என அதிகரித்துள்ளது.

மோட்டார் வாகன எரிபொருள் எரிக்கப்படும் போது, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும்போது வெளியேறும் நைட்ரஜன் ஆக்சைடு மிகவும் ஆபத்தானது. இது, மக்களின் உடல்நலனை கடுமையாக பாதிக்கும். சுவாச பாதிப்பு மற்றும் மூளையை பாதித்து இறப்புக்கும் கூட வழிவகுக்கும்.

2021ஆம் ஆண்டில் தொற்றுநோய் இந்தியாவில் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மாசுபட்ட நகரங்கள் தான், அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு ஆளாகின்றன என்பதற்காக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தர குறியீட்டின்படி காற்று மாசின் அளவு, சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட 80 அளவுக்கும் அதிகமாக இருப்பது ஆபத்து என்கிறது இந்த ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *