செய்திகள்

சென்னையிலுள்ள இந்திய – ரஷ்ய தொழில், வர்த்தக சபையுடன் ரஷ்யாவின் ‘பிரிமோஸ்கி’ தொழில், வணிக அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, பிப். 9–

இந்தோ–ரஷ்ய வர்த்தக, தொழில் அமைப்புடன் ரஷ்ய நாட்டின் விளாடிவாஸ்டாகில் உள்ள பிரிமோஸ்கி வணிக அமைப்பும், காணொலி நிகழ்ச்சியில் வணிக ஏற்றுமதிக்கான ஒப்பந்தந்தத்தை செய்தது.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல், பண்பாட்டு மையத்தில், நேற்று பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தோ–ரஷ்ய வர்த்தக, தொழில் அமைப்பும் ரஷ்யாவின் விளாடிவாஸ்டாகில் உள்ள யூனியன் பிரிமோஸ்கி தொழில், வணிக அமைப்பும் காணொலி நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த இருதரப்பு ஒப்பந்த நிகழ்ச்சியில் சென்னையிலுள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தின் இயக்குநரும் துணை தூதருமான கென்னடி ராகலேவ் வரவேற்று பேசும்போது, இரண்டு நாடுகளிடையே பிராந்திய அளவிலான வர்த்தகம், கல்வி, அறிவியல், பண்பாட்டு தளங்களில் மேம்பாடு ஏற்பட, சென்னையிலுள்ள ரஷ்ய மையம் துணையாக இருக்கும் என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்து

தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ஓலெஜ் அவ்தீவ் தலைமையில் நடைபெற்ற இந்த காணொலி நிகழ்ச்சியில், இந்திய–ரஷ்ய வர்த்தக சபையின் நிறுவனரும் தலைவருமான பட்டர் பிளை நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நாராயணன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதேபோல், ரஷ்யாவில் உள்ள யூனியன் பிரிமோஸ்கி வணிக அமைப்பின் தலைவர் போரீஸ் ஸ்டுப்னிட்ஸ்கி, விளாடிவாஸ்டாக் நகரத்தில் இருந்து காணொலி மூலம் கலந்து கொண்டு, கையெழுத்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய தூதர் ஒலெஜ் அவ்தீவ், இந்தியா, ரஷ்யா இடையே நீண்ட கால நட்புறவு உள்ளது. அதேபோல் தென்இந்திய மாநிலங்களுக்கும் ரஷ்யாவோடு பண்பாட்டு நிலையிலான உறவும் வணிக நடவடிக்கைகளும் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்போது மேற்கொள்ளப்படும் இரண்டு நாடுகளின் பிராந்திய அளவிலான அமைப்புகளிடையேயான ஒப்பந்தங்கள், இரண்டு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கும், பண்பாட்டு உறவுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றார்.

இந்திய–ரஷ்யா தொழில், வர்த்தக சபையின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லட்சுமி நாராயணன் பேசும்போது, இந்தியா, ரஷ்யா இடையே நீண்ட கால நட்புறவும், பண்பாட்டு, வணிக உறவும் மேலோங்கி இருந்து வருவதை நாம் அறிவோம். நம் நாடுகளுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் பெரிய அளவில் உயர வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். நம் இருநாடுகளின் வணிக வாய்ப்புகளும் சந்தை வாய்ப்புகளும் மிகவும் விரிவானது. நாம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதன் மூலம் வணிக உறவை மேம்படுத்த முடியும். அது நமது இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

பிராந்திய அளவில் வளர்ச்சி

இந்த இருதரப்பு ஒப்பந்த நிகழ்ச்சியில், ரஷ்ய நாட்டின் விளாடிவாஸ்டாக் நகரத்தில் இருந்து கலந்துகொண்ட யூனின் பிரிமோஸ்கி வர்த்தக அமைப்பின் தலைவர் போரீஸ் ஸ்டுப்னிட்ஸ்கி பேசும்போது கூறியதாவது:–

இரண்டு நாடுகளின் வர்த்தக அமைப்புகளிடையே இன்று முக்கியமான ஒப்பந்தம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷ்ய அதிபர் அண்மையில் இந்தியாவுக்கு வந்தபோது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதுபோல், இந்திய, ரஷ்யா இடையே பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், பிராந்திய அளவிலும் அதனை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவும். இரண்டு நாடுகளிலும் உள்ள அடிப்படையான பொருளாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கும் இவை உதவும் என்றார்.

நிகழ்ச்சியில் வாழ்த்திப் பேசிய ‘ஜெம்’ வீரமணி, இரண்டு நாடுகளின் பிராந்திய அளவிலான அமைப்புகளிடையே வணிக வளர்ச்சி, ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்திய–ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் தங்கப்பன் ஒருங்கிணைந்து, தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.சுந்தரவடிவேல், திரைப்பட இயக்குநர், நடன இயக்குநர் கவுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, அமைப்பின் பொருளாளர் ஜெயந்தி மனோஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.