செய்திகள்

சென்னையிலிருந்து இயங்கும் டைல்ஸ் கம்பெனியில் வருமான வரி சோதனை: ரூ.220 கோடி கறுப்புப் பணம்

சென்னை, பிப்.28

சென்னையிலிருந்து இயங்கும் ஒரு பிரபலமான தனியார் டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 220 கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டறியப்பட்டது.

அந்த டைல்ஸ் தயாரிப்பு நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினர்.

தமிழகம், குஜராத் மற்றும் கொல்கத்தாவில் உள்ள 20 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று இரவு வெளியிட்டது.

அதில், டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை கணக்கில் வராத ரூ.220 கோடி பணம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையின்போது ரூ.8.30 கோடி ரொக்கம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவைத் தாண்டியும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனை முடிந்தபிறகே கைப்பற்றப்பட்ட மொத்த பணம், வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணம் தொடர்பான ஆவணங்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும்.

50%க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் கணக்கில் இல்லை. முந்தைய ஆண்டு மொத்த விற்றுமுதலை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் கணக்கில் காட்டப்படாமல் மறைத்திருப்பது ரூ.120 கோடி அளவுக்கு இருக்கக் கூடும். இதே போல கணக்கில் மறைக்கப்பட்டிருக்கும் வருமானம் ரூ.100 கோடி அளவுக்கு இருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *