மக்கள் குரல் பார்வையில்

சென்னையின் வரலாறு பேசும் ஒளி விளக்கு

Makkal Kural Official

இந்தியாவின் கடல் மட்டத்தை அளவிடும் ‘பூஜ்ஜியப் புள்ளி’ (Zero Point) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்தில்தான் தொடங்கியதுதாம்!

ஜனவரி 1, 1844 அன்று பயன்பாட்டிற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கலங்கரை விளக்கம், சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கமாகும். அக்காலத்தில் ‘எஸ்ப்ளனேட்’ என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் அமைந்திருந்த இந்த கலங்கரை விளக்கம், கடற்பயணிகளுக்கு வழிகாட்டியதுடன் அறிவியல் வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றது.

கலங்கரை விளக்கம்:

சென்னையின் முதலாவது கலங்கரை விளக்கம் 1796 முதல் புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தின் மீது செயல்பட்டு வந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளர் கேப்டன் ஜே.டி. ஸ்மித் வடிவமைத்த இந்த கலங்கரை விளக்கத்தில், அக்காலத்தின் நவீன தொழில்நுட்பமான ஆர்கண்ட் விளக்குகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டன.

இதன் ஒளி சுமார் 20 மைல் தூரம் வரை பாய்ச்சும் திறன் கொண்டதாக இருந்தது. மேலும், இந்தியாவின் பல மலைகளின் கடல் மட்ட உயரத்தை கணக்கிட்ட புகழ்பெற்ற ‘மேகா திரிகோணவியல் ஆய்வு’ திட்டத்திற்கு, இந்த கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதியே ‘பூஜ்ஜிய புள்ளி’யாக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1838 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1843 இல் நிறைவடைந்து, அதிகாரப்பூர்வமாக 1844 ஜனவரி 1 அன்று செயல்பாட்டிற்கு வந்தது. கிரேக்க கட்டிடக்கலையின் ‘டோரிக்’ தூண் வடிவத்தில், பல்லாவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கலங்கரை விளக்கம், சுமார் 125 அடி உயரம் கொண்டதாக இன்றும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு முக்கிய பாரம்பரியச் சின்னமாக காட்சியளிக்கிறது.

பண்டைய தமிழர்களும் கப்பல் போக்குவரத்திற்காக கலங்கரை விளக்கங்களைப் பயன்படுத்தியுள்ளனர், இது ‘பெரும்பாணாற்றுப்படை’ போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தீப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது நவீன மின்விளக்குகள் மற்றும் லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் Lighthouse அதாவது ஒளியை உமிழும் ஒரு ‘வெளிச்ச வீடு’ என்று கூறுவார்கள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *