செய்திகள்

சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா

அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேச்சு

சென்னை, செப்.29-

சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்படும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்-2023 வழங்கும் விழா சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் க.மணிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கான நெறிமுறைகள் பதிவுத் திட்டம்–2023 மற்றும் சுற்றுலா சேவை வழங்குபவர்களுக்கு பதிவுகள் மேற்கொள்வதற்கான திட்டம் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழ்நாட்டை உலகின் முக்கிய இடமாக உருவாக்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டங்களை தீட்டி, அவற்றை செயல்படுத்தி வருகின்றார். இந்த லட்சியத்தை அடையும் வகையில் ‘‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை–2023’’யை வெளியிட்டு சுற்றுலாவிற்கு தொழில் தகுதி கிடைக்க வழிசெய்துள்ளார்.

அதன்படி, வருடாந்திர மாநில மொத்த உற்பத்தியில் குறைந்தது 12 சதவீதம் சுற்றுலாத்துறை பங்களிப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். சுற்றுலா மற்றும் அதன் துணைத்தொழில்கள் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுற்றுலாத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோக்கள் போன்ற உலகளாவிய தீம் பார்க்குகள் போல சென்னையின் புறநகர் பகுதியில் குறைந்தது 100 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா தனியார் துறை பங்கேற்புடன் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இ.கமலா மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *