சென்னை, செப். 17–
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை எண் – 4 ல்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஆறு நாட்களுக்கு முன்பாக பொன்னேரியில் விவசாய வேலைக்காக வந்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்து வேலையில்லாத காரணத்தினால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அவர்களில் சிலர், பணம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே தங்கி, ஏதாவது வேலை கிடைத்தால் செய்யலாம், என கூறியுள்ளனர். அதன்பேரில் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியிலேயே தங்கினர். இவர்களிடம் போதிய பணம் இல்லாததால், உணவு சாப்பிடாமல் இருந்துள்ளனர். இதில் ஒருவர் ஹவுரா ரெயிலில் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
மற்ற பத்து நபர்களில் 4 பேர் பசியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மயக்க நிலையில் இருந்தனர். இதை பார்த்த சென்னை சென்ட்ரல் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் 4 பேரையும் மீட்டு அப்போலோ அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்றவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.