மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைக்கிறது
சென்னை, டிச.20-
சென்டிரல் ரெயில் நிலையம் அருகே 27 மாடியில் பிரம்மாண்ட கட்டிடத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைக்க உள்ளது.
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை நாள் தோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்டிரல் ரெயில் நிலையமும் அருகில் இருப்பதால் ரெயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதேபோல, மெட்ரோ ரெயில் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அருகில் உள்ள இடங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறது.சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ரூ.33 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதேபோல, சென்டிரல் ரெயில் நிலைய மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இடைப்பட்ட ‘சென்டிரல் சதுக்கம்’ பகுதியில் 27 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்ட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 27 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட இருக்கிறது. இதில், 2 மாடிகள் ஓட்டல்களாகவும், 20 மாடிகள் அலுவலக உபயோகத்திற்கும், 5 மாடிகளில் கடைகள், திரையரங்கம் போன்றவைகள் வர உள்ளது. 1,500 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பெரிய வாகன நிறுத்தகம் தரைப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது. ரூ.562 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பிக்க இருக்கிறோம். இந்த திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசனையில் உள்ளது. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சதுக்கத்தில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கட்டிட வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக 33 மாடி கட்டிடமாக கட்ட முதலில் முடிவு செய்யப்பட்டது. தற்போது 27 மாடி கட்டிடமாக கட்ட இறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 15 ஆயிரத்து 884 சதுர அடியில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.