சிறுகதை

சென்டிமென்ட்-ரமேஷ் ஜி.சாந்தப்பன்

அயர்ன் செய்து கொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது.

எடுத்தார் ராமசாமி.

” ஹலோ,துணிகளை தோய்ச்சு அயரன் பண்ணிக்கொடுக்கிற

ராமசாமிங்களா?”

” ஆமாங்க.நீங்க யாருங்க?”

” நான் ‘ செங்கல்’ சீனிவாசன்

பேசறேன்.செங்கல் சூளை வெச்சிருக்கிறேன்.ரெண்டு முறை எம்.எல்.ஏ வா நின்னு

தோத்துட்டேன்.நல்லா இருக்கீங்களா?”

” நல்லா இருக்கிறேனுங்க.

அய்யா…நீங்க வந்து எனக்கு

போன்…?!”

” ராமசாமி, நான் இந்த முறையும் எம்.எல்.ஏ க்கு நிற்கிறேன்.உங்க வீட்ல இருக்கிற நாலு ஓட்டையும் எனக்கே போட்டு ஆதரியுங்க.நான் எம்.எல்.ஏ ஆனா உங்களை மாதிரி இருக்கிற எல்லோருக்கும்

சத்தியமா நல்லது செய்வேன்.

என்னை நம்பி ஓட்டுப்போடுங்க.உங்க வீட்டுல எல்லாரையும் நான் கேட்டதா சொல்லுங்க. நன்றி.வச்சிடறேன்”.

போனை வைத்து விட்டார் சீனிவாசன்.

தன்னையும் ஒரு வி.ஐ.பி யாக நினைத்து போன் செய்ததை

எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் கூத்தாடினார் ராமசாமி.

அதே சமயம்.

‘ செங்கல்’ சீனிவாசன் வீடு.

உதவியாளர் ஒருவர் சீனிவாசனிடம் சொன்னார்.

” லட்சக்கணக்கான பொது மக்களோட போன் நம்பர்கள்;

அவங்களுக்கு எத்தனை ஓட்டு

இருக்கிறதுங்கிற டீடெய்ல்ஸ்

எல்லாம் இந்த லெட்ஜர்கள்ல

இருக்குங்க முதலாளி.முதல் போன் ராமசாமிக்கு பண்ணியாச்சு.மத்த நம்பர்களுக்கும் போன் பண்ணி தரட்டுங்களா முதலாளி?”

” ம்..ம்..பண்ணு பண்ணு. இன்னிக்கு மூவாயிரம் பேருக்காவது போன் பண்ணி

ஓட்டு கேட்டுடனும்”

போனில் ஓட்டுக்கேட்கும் பணி

தொடர்ந்தது.நேரில் மூன்று லட்சம் பேரை சந்தித்து

ஓட்டுக்கேட்கும் திட்டமும் இருக்கிறது.

வீட்டு வாசலில் நின்றிருந்த சீனிவாசனின் உதவியாளர்கள் இருவர் தங்களுக்குள் இப்படி பேசிக்கொண்டிருந்தார்கள்.

” ஏன்டா சுப்பு,நம்ம முதலாளி என்ன ஒரு கழுதையோட படத்தை வீட்டுல பூஜை அறையில வச்சு தினமும் அதுக்கு பூ போட்டு கும்பிட்டிட்டிருக்கார்?”

“ஓ…அதுவா..ஏற்கனவே

ரெண்டு முறை தோத்து போனதால இந்த முறை எப்படியாவது ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆகிடனும்னு நம்ம முதலாளி உறுதியா இருக்கார்.

அதுக்காக ஒரு பிரபல ஜோதிடர்கிட்ட ஐடியா கேட்டார்.அவர் தான் ஒரு கழுதையை போட்டோ எடுத்து

அதில் ‘ என்னைப்பார் யோகம் வரும்’ னு வாசகம் எழுதி அதை பிரேம் பண்ணி வீட்டு பூஜை அறையில் வச்சு தினமும் பூ போட்டு கும்பிடச்சொன்னார்.

அப்படி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்னு சொல்லியிருந்தார்.

அதைத்தான் நம்ம முதலாளி தினமும் கடை பிடிக்கிறார்”

” ஓ…சரி சரி புரிஞ்சுது.இன்னொரு சந்தேகம்.அந்த லாண்டரி கடை

வச்சிருக்கிற ராமசாமிக்கு எதுக்கு முதல் போன் செய்து

அவர்கிட்ட ஓட்டு கேட்டாங்க?”

” நல்ல கேள்வி.அந்த ராமசாமியோட கழுதையைத்தான் நம்ம முதலாளியோட டிரைவர் போய், ராமசாமிக்கு தெரியாம

போட்டோ எடுத்து வந்து வாசகம் எழுதி பிரேம் பண்ணி

கொடுத்திருக்கார்.கழுதைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை ராமசாமிக்கும் கொடுத்தா’ செண்டிமென்ட்டா’ நிச்சயம்

ஜெயிக்கலாம்னு நம்ம முதலாளி நம்பறார்.அதான்!”

” ஓ.கே. ஓ.கே.புரிஞ்சிட்டேன்”

ஏப்ரல்-6 ; 2021.

தேர்தல் நடந்து முடிந்தது.

மே-2; 2021.மாலை.

‘ செங்கல்’ சீனிவாசன் ஒன்னரை லட்சம் வாக்குகள்

வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நூற்றுக்கணக்கான விசிவாசிகள் வீட்டைச்சுற்றி

பரவியிருக்க….

‘ செங்கல்’ சீனிவாசன் தன் உதவியாளர்களிடம் இப்படி

கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

” டேய் சுப்பா…வந்திருக்கிற எல்லாருக்கும் கேக் கொடுக்கனும்.அதுக்கு பெரிய

பேக்கரிக்கு போய் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வா.

….இந்த வெற்றியை கொண்டாடனும்…டேய்..சிவராமா…நீ போய் அந்த ‘லாண்டரி கடை ‘ராமசாமியை பார்த்து

நான் அழைச்சேன்னு சொல்லி அவரை நம்ம வீட்டுக்கு கார்ல வச்சு கூட்டிட்டு வா…அவர் தான் இன்னிக்கு கேக்கை

வெட்டனும்.அப்புறம் காளிமுத்து, நீ என்ன பண்றேன்னா…”

தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாலும் தான் இந்த வெற்றி கிடைத்தது என்பதை கணிக்க மறந்து,

கழுதையாலும் ராமசாமிக்கு

முதல் போன் செய்ததாலும்

தான் இந்த வெற்றி கிட்டியது

என்று ‘ சென்டிமென்ட்’ டை

நம்பி தொடர்ந்து விசுவாசிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்

‘ செங்கல்’ சீனிவாசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *