செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

3 மாதத்தில் விசாரணையை முடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, பிப். 28–

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் ‘அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகள் தவிர மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டி ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான். வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து அமலாக்கத் துறை சார்பில், சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டால் சான்றளிக்கப்பட்ட உண்மையான ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே அவருக்கு ஜாமின் வழங்க முடியாது.செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்னும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் 2 வது முறையாக சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *