சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு
சென்னை, ஜூன் 15–
அமைச்சர் செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை இன்று சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
17 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, என்.ஆர்.ரகுபதி, ஐ.பெரியசாமி, சபரீசன் உள்ளிட்டவர்கள் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
கைதி எண் 1440
இந்தநிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணைக் கைதி 1440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கைதிக்கான பதிவேடு எண் – 001440 என்ற எண் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளதாக புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற காவலில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜி குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவர்கள், அவரது உறவினர்களை சந்தித்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.