செய்திகள்

செந்தில்பாலாஜியை டெபாசிட் இழக்க செய்யுங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

கரூர், மே 11–

நன்றி கூட சொல்ல வராமல் ஓட்டு கேட்டு வரும் செந்தில்பாலாஜியை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அத்திப்பாளையம் ஊராட்சி, முன்னூர் ஊராட்சி பகுதிகளில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் புரட்சித்தலைவி அம்மா நல்லாட்சி நடத்தினார். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு மழை நீர் நிரம்பியது.

பொங்கல் பரிசாக கரும்பு, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் அம்மா அரசு வழங்கியது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக அம்மா அரசு அறிவித்தது. மக்களுக்கு நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதை தடுக்கும் நோக்கத்துடன் தி.மு.க. உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. தேர்தல் முடிந்தவுடன் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். தார்சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் இதுவரை 5 கட்சிகள் மாறியவர். தேர்தலில் வெற்றி பெற்று தொகுதியில் நன்றி சொல்லக் கூட வராதவர். ஆனால் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 2011 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அம்மா அரசின் சாதனைகள் தொடர எளிமையான கழக வேட்பாளரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்யுங்கள். நன்றி கூட சொல்ல வராமல் ஓட்டு கேட்டு வரும் செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

பிரச்சாரத்தின்போது கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், கே.ஆர்.கந்தசாமி, முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், கோபி நகர செயலாளர் பி.கே.காளியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, முன்னாள் நகராட்சி தலைவர் கே.கே.கந்தவேல் முருகன், எலத்தூர் பேருராட்சி செயலாளர் சேரன் சரவணன், ஈஸ்வரமூர்த்தி, ஞானசுந்தரம் உள்பட பலர் கலந்து உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *